Q1) முஹம்மது நபி (ஸல்) எத்தகைய மக்கள் வாழ்ந்த காலத்தில் பிறந்தார்கள்?
கற்களையும், சிலைகளையும், வாழ்ந்து மறைந்த நல்லடியார்களின் உருவங்களையும் கடவுள் எனவும், கடவுளுக்கு நெருக்கமானவர்கள் எனவும் வழிபட்ட அறியாமைக் கால மக்கள் வாழ்ந்த சமூகத்திலே பிறந்தார்கள்.
Q2) அறியாமைக் கால மக்கள் வணங்கிக் கொண்டிருந்த கடவுளர்களின் பெயர்கள் சிலவற்றைக் கூறுக:
லாத், மனாத்,உஸ்ஸா,ஹுப்ல் – இவைகள் முஹம்மது நபி (ஸல்) பிறந்த கால கட்டத்தில் வாழ்ந்த மக்களின் கடவுள்களாகும்.
Q3) முஹம்மது நபி (ஸல்) பிறந்த கால கட்டத்தில் வாழ்ந்த மக்களின் சமூகம் எப்படியிருந்தது?
அநியாயம் பரவிக் கிடந்தது. பலவீனர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. பெண் குழந்தைகள் உயிருடன் புதைக்கப்பட்டனர். புனிதமானவைகள் அலட்சியப்படுத்தப்பட்டன. பலமுள்ளவர்கள் பலவீனர்களின் உரிமைகளைச் சுரண்டித் தின்றனர். கணக்கின்றி பல மனைவியரை வைத்திருந்தனர். விபச்சாரம் பரவிக்கிடந்தது. அற்பக் காரணங்களுக்காக பல குலங்களிடையே போர்கள் நடந்துகொண்டிருந்தன.
Q4) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த நபியின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்?
நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மகனார் நபி இஸ்மாயில் (அலை) அவர்களின் வம்சா வழியைச் சேர்ந்தவராவார்கள்.
Q5) நபி (ஸல்) அவர்கள் எந்த குலத்தைச் சேர்ந்தவர்கள்?
அரேயிர்களின் உயர் குலமான குரைஷிக் குலத்தைச் சேர்ந்தவர்கள்.
Q6) முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் பெயர் என்ன?
அப்துல் முத்தலிஃப்
Q7) முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தந்தையார் பெயர் என்ன?
அப்துல்லாஹ்
Q8) முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தாயார் பெயர் என்ன?
ஆமினா அம்மையார்
Q9) முஹம்மது (ஸல்) அவர்களின் தாயார் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவராவார்?
ஆமினா அம்மையார் பனூஸஹ்ரா கோத்திரத்தைச் சேர்ந்த வஹ்ப் என்பவரின் மகளாவார்.
Q10) முஹம்மது (ஸல்) அவர்களின் தந்தை எங்கு, எப்போது மரணமடைந்தார்கள்?
முஹம்மது (ஸல்) அவர்கள் தன் தம் தாயின் வயிற்றில் சில மாத கருவாக இருந்தபோது, சிரியா நாட்டிற்கு வியாபாரத்திற்காக செல்லும் வழியில் மதினாவில் நோய்வாய்பட்டு இறந்தார்.
Q11) முஹம்மது (ஸல்) அவர்கள் எந்த வருடம் பிறந்தார்கள்?
கி.பி. 570 ஆம் ஆண்டு, ரபியுல் அவ்வல் மாதம் பிறந்தார்கள். பிறந்த தேதியில் கருத்து வேறுபாடு உண்டு. ஆயினும் பல அறிஞர்களின் கருத்துப்படி ரபியுல் அவ்வல் மாதம் 12-ல் பிறந்தார்கள் என்பதாகும்.
Q12) முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்த வருடம் வரலாற்று ஆசிரியர்களிடையே எப்படி அழைக்கப்படுகிறது?
யானை ஆண்டு என அழைக்கப்படுகிறது.
Q13) முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்த வருடம் யானை ஆண்டு என்று ஏன் அழைக்கப்படுகிறது?
நபிகள் நாயகம் பிறப்பதற்கு ஐம்பது நாட்களுக்கு முன்பு கஃபதுல்லாஹ்வை இடிப்பதற்காக படைதிரட்டி வந்த ஆப்ரஹாம் என்ற கிறிஸ்தவ ஆட்சியாளரின் யானைப் படையினர் மீது அல்லாஹ் ‘அபாபீல்’ என்னும் பறவைகளை அனுப்பி அவற்றை அழித்தான். இதன் காரணமாக அந்த ஆண்டை யானை ஆண்டு என்கின்றனர்.
Q14) முஹம்மது (ஸல்) அவர்கள் குழந்தையாக இருந்த போது அவர்களுக்குப் பாலூட்டிய செவிலித் தாய் யார்?
பனூஸஃத் கோத்திரத்தைச் சேர்ந்த கிராமவாசியான ஹலீமத்துஸ் ஸஃதிய்யா என்ற அம்மையார்.
Q15) முஹம்மது (ஸல்) அவர்களின் தாயார் எப்போது மரணமடைந்தார்கள்?
நபி (ஸல்) அவர்கள் ஆறு வயதாக இருக்கும் போது மதினாவிலிருந்து திரும்பும் வழியில் அப்வாஃ என்னுமிடத்தில் ஆமினா அம்மையார் மரணமடைந்தார்கள்.
Q16) முஹம்மது (ஸல்) அவர்களின் தாயார் மரணத்திற்குப் பின்னர் யார் பொறுப்பில் வளர்ந்தார்கள்?
தமது பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களின் பொறுப்பில் வளர்ந்தார்கள்.
Q17) முஹம்மது (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் எப்போது மரணமடைந்தார்கள்?
நபி (ஸல்) அவர்களுக்கு எட்டு வயதாக இருக்கும் போது.
Q18) அப்துல் முத்தலிப் அவர்களின் மரணத்திற்குப்பிறகு முஹம்மது (ஸல்) அவர்கள் யார் பொறுப்பில் வளர்ந்தார்கள்?
நபி (ஸல்) அவர்களின் பெரிய தகப்பனார் அபுதாலிப் அவர்களின் பொறுப்பில் வளர்ந்தார்கள்.
Q19) முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அச்சமூக மக்களால் வழங்கப்பட்ட பெயர்கள் யாவை? ஏன்?
உண்மையாளர், மற்றும் நம்பிக்கையாளர் (அல்-அமீன்) என்று அழைக்கப்பட்டார்கள்.
காரணம் இவ்விரண்டு குணங்களின் அடிப்ப டையிலேயே வளர்ந்து வந்தார்கள். நம்பிக்கைக்குரியவர் வந்து விட்டாரெனக் கூறப்பட்டால் நிச்சயமாக அது நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் தான் என்று புரிந்துகொள்ளப்படும்.
Q20) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது ஆரம்பக் காலத்தில் செய்த தொழில் என்ன?
குரைஷிகளில் ஒருவரிடம் கூலிக்கு ஆடுகள் மேய்க்கும் வேலையைச் செய்தார்கள்.
Q21) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த நாட்டுக்கு வியாபாரத்திற்காகச் சென்றார்கள்?
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சிரியா நாட்டுக்கு வியாபாரத்திற்காகச் சென்றார்கள்.
Q22) முஹம்மது நபி (ஸல்) அவர்களின் முதல் திருமணம் எப்போது யாருடன் நடந்தது?
நபி (ஸல்) அவர்களுக்கு 25 வயதாக இருக்கும் போது விதவையான 40 வயதான கதீஜா (ரலி)அம்மையாருடன் நடந்தது.
Q23) முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு கதீஜா (ரலி) அவர்கள் மூலமாகப் பிறந்த குழந்தைகள் யாவர்?
ஸைனப் (ரலி), ருகைய்யா (ரலி), உம்முகுல்ஸும் (ரலி), ஃபாத்திமா (ரலி) ஆகிய பெண் மக்க ளையும் காசிம் (ரலி), அப்துல்லாஹ் (ரலி) என்ற இரு ஆண் மக்களையும் பெற்றெடுத்;தார்கள்.
காசிம் (ரலி), அப்துல்லாஹ் (ரலி) ஆகிய இருவரும் சிறுவயதிலேயே இறந்துவிட்டார்கள்.
Q24) முஹம்மது நபி (ஸல்) அவர்களின் எத்தனையாவது வயதில் வஹி இறங்க ஆரம்பித்தது?
40 ஆம் வயதில்.
Q25) முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எந்த இடத்தில் முதன்முதலாக வஹீ இறங்கியது?
மக்காவிலுள்ள ஜபல் அல்-நூர் என்று சொல்லப்படக்கூடிய மலையிலுள்ள ஹிரா என்னும் குகையில்
Q26) முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறைவனிடமிருந்து வஹியை கொண்டு வந்த வானவர் பெயர் என்ன?
ஜிப்ரயீல் (அலை)
Q27) முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதலாக இறங்கிய வஹி எது?
அல்-குர்ஆனின் 96 வது அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்கள். (96:1-5)
Q28) முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதலாக வஹி இறங்கிய நிகழ்ச்சியைக் கூறுக:
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் இருபத்தொன்றாம் இரவில் ஹிரா குகையில் தங்கியிருந்த போது ஜீப்ரீல் (அலை), நபி (ஸல்) அவர்களிடம் வந்து நீர் ஓதுவீராக! எனக் கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எனக்கு ஓதத்தெரியாது எனக் கூறினார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் இரண்டாம் முறையும், மூன்றாம் முறையும் ஓதுவீராக எனக் கூறினார்கள். மூன்றாம் முறை ”படைத்த உம் இறைவனின் திருப் பெயர் கொண்டு ஓதுவீராக! கருவறைச் சுவற்றில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு நிலையிலிருந்து அவன் மனிதனைப் படைத்தான். ஓதுவீராக! உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில் அவனே எழுது கோலின் மூலம் கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றை யெல்லாம் கற்றுக் கொடுத்தான்”(96:1-5) எனக் கூறினார்கள். பின்னர் அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள்.
Q29) ஜிப்ரயீல் (அலை) அவர்களைக் கண்டு பயந்திருந்த நபி (ஸல்) அவர்களை யாரிடம் கதீஜா (ரலி) அவர்கள் அழைத்துச் சென்றார்கள்?
வரகா இப்னு நவ்பல் என்ற கிறிஸ்தவ அறிஞரிடம்.
Q30) முதன் முதலில் வணக்கத்திற்குரியவன் ஏக இறைவனான அல்லாஹ் ஒருவனே என்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் எனவும் ஏற்றுக்கொண்டவர் யார்?
நபி (ஸல்) அவர்களின் மனைவி கதீஜா (ரலி) அவர்கள்.
Q31) நபி (ஸல்) அவர்கள் எத்தனை ஆண்டுகள் இரகசியமாக பிரச்சாரம் செய்தார்கள்?
மூன்றாண்டுகள். இந்த மூன்றாண்டுகளில் அநேகர் இஸ்லாத்திற்கு வந்தனர். ஆயினும் குரைஷிகளின் துன்புறுத்தலுக்குப் பயந்து அதை இரகசியமாக வைத்திருந்தனர்.
Q32) மக்கத்து காஃபிர்களும் திருமறை வசனங்களுக்கு கட்டுண்டு இறைவனை சிரம் பணிந்த நிகழ்ச்சியைக் கூறுக:
ஒரு முறை ரமலானில் நபி (ஸல்) அவர்கள் கஃபாவிற்குச் சென்றார்கள். அங்கு நின்றுகொண்டு திடீரென நஜ்ம் அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தார்கள். இதற்கு முன் அல்லாஹ்வின் வார்த்தையைச் கேட்டிராத இறை நிராகரிப்பாளர்களான குரைஷிகள் இப்போது நபி (ஸல்) அவர்கள் திடீரென இந்த அத்தியாயத்தை ஓதிக்காட்டியபோது- ஈர்ப்பு சக்தியுள்ள இத்தெய்வீக வாக்கு அவர்களின் செவிகளைத் தட்டியபோது அவர்களில் ஒவ்வொருவரும் அதை செவிதாழ்த்திக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். இறுதியாக ”அல்லாஹ்வுக்கே சிரம்பணியுங்கள்! அவனையே வணங்குங்கள்!”என்ற வசனத்தை ஓதி நபி (ஸல்) அவர்கள் சிரம்பணிந்தபோது அவர்களில் யாரும் தன்னைக் கட்டுப்ப டுத்திக்கொள்ள முடியாமல் விழுந்து சிரம்பணிந்தார்கள்.
Q33) நபி (ஸல்) அவர்கள் பகிரங்க அழைப்பு விடுக்கவேண்டும் என இறங்கிய வசனம் எது?
”உமக்கு கட்டளையிடப்பட்டிருப்பதை பகிரங்மாக அறிவிப்பீராக! இணைவைப்பவர்களைப் புறக்கணிப்பீராக!”(15:94)
Q34) நபி (ஸல்) அவர்கள் செய்த முதல் பகிரங்க பிரச்சாரம் எது?
நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் ஸஃபா குன்றின் மீது நின்று கொண்டு குரைஷிகளை அழைத்தார்கள். அவர்கள் முன் அதிகமானோர் ஒன்று கூடினார்கள் அப்போது அவர்களை நோக்கி,
”இம்மலைக்குப் பின்னால் எதிரிகள் உங்களை அழிக்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என நான் உங்களிடம் கூறினால் நீங்கள் என்னை நம்புவீர்களா?” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள் ஆம்! உண்மையையும் நம்பிக்கையையும்; தவிர வேறு எதையுமே நாங்கள் உங்களிடம் அறிந்ததில்லை எனக் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், நிச்சயமாக நான் கடுமையான வேதனையை விட்டும் உங்களை எச்சரிக்கை செய்கிறேன் எனக் கூறினார்கள். பின்பு அவர்களை அல்லாஹ்வின் பக்கமும் சிலை வணக்கங்களை விட்டுவிடுமாறும் அழைக்க ஆரம்பித்தார்கள். அப்போது அக்கூட்ட த்திலிருந்த அபூலஹப் கொதித்தெழுந்தான். உனக்கு நாசம் உண்டாகட்டும்! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்? எனக் கேட்டான். இதன் பிறகு அல்லாஹ் இந்த அத்தியாயத்தை இறக்கிவைத்தான்: ”அபூலஹபின் இரு கைகளும் நாசமாகட்டும்! அவனும் நாசமாகட்டும்! அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்தவையும் அவனுக்;கு எந்தப் பல னையும் அளிக்கவில்லை. விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் போடப்படு வான். (இங்கும்அங்கும்)புறம்பேசித்திரிபவளான அவனுடைய மனைவியும் (நெருப்பில்போடப் படுவாள்) அவளின் கழுத்தில் முறுக்கேற்றப்பட்ட கயிறு இருக்கும்”.(111:1-5)
Q35) இஸ்லாத்திற்காக முதன்முதலாக உயிர்தியாகம் செய்தவர் யார்?
இஸ்லாத்தில் முதன் முதலாக உயிர்த்தியாகம் செய்தவர் சுமையா (ரலி) என்ற பெண்மணி ஆவார்கள்.
Q36) இஸ்லாத்தை ஏற்றதற்காக பிலால் (ரலி) அவர்கள் பட்ட கஷ்டங்கள் யாவை?
பிலால்(ரலி) அவர்கள் இஸ்லாத்தை விட்டுவிட வேண்டுமென்பதற்காக பிலால் (ரலி) அவர்களின் எஜமான் உமையா பின்கலஃப், பிலால்(ரலி) அவர்களைச் சங்கிலியால் கட்டி மக்காவிற்கு வெளியே கொண்டு வந்து அனல் பறக்கும் மணலில் படுக்க வைத்து அவர்களின் நெஞ்சில் மிகப் பெரும் பாரங்கல்லை வைத்து அவனும் அவனைச் சாந்தவர்களும் அவர்களைச் சாட்டையால் மாறி மாறி அடித்தனர். பிலால்(ரலி) அவர்கள் ஏகன், ஏகன் என்றே திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந் தார்கள். இந்நிலையில் அபூபக்கர்(ரலி) உமையாவிட மிருந்து பிலால்(ரலி) அவர்களை விலைக்கு வாங்கி சுதந்திரமானவர்களாக அல்லாஹ்வின் பாதையில் விடுதலை செய்தார்கள்.
Q37) முஸ்லிம்கள் முதன் முதலாக எந்த நாட்டிற்குச் ஹிஜ்ரத் சென்றார்கள்?
மக்கத்து இறை நிராகரிப்பாளர்களின் கொடுமைகளிலிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக சுமார் 70 முஸ்லிம்கள் தத்தம் குடும்பத்தார்களுடன் நஜ்ஜாஸி மன்னர் ஆட்சி செய்து கொண்டிருந்த அபீஸீனியாவிற்கு ஹிஜ்ரத் சென்றார்கள்.
Q38) உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற விதத்தைக் கூறுக:
நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்வதற்காக உருவிய வாளுடன் புறப்பட்டுச் சென்ற உமர் (ரலி) அவர்கள் வழியில் தம் சகோதரி இஸ்லாத்தை தழுவிய செய்தி கேட்டு அவரின் வீட்டிற்குச் சென்று, அங்கே திருக்குர்ஆனைச் செவியுற்று இஸ்லாத்தை ஏற்றார்.
Q39) இஸ்லாத்தை விட்டு விட வேண்டுமென்பதற்காக முஸ்லிம்களையும் பனூ ஹாஷிம் குலத்தவர்களையும் எத்தனை ஆண்டுகள் சமூக புறக்கணிப்பு செய்தனர்?
மூன்றாண்டுகள். முஸ்லிம்கள் மக்காவிற்கு வெளியே உள்ள கணவாய்களில் ஒன்றான அபூதாலிப் கணவாய்க்கு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானார்கள். அங்கு முஸ்லிம்கள் மிகக்கடுமையான கஷ்டத்திற் காளானார்கள். பசியையும் பல்வேறு கஷ்டங்களையும் அனுபவித்தனர். அவர்களில் வசதியுள்ளவர்கள் தங்களின் பெரும் பொருளைச் செலவிட்டனர். கதீஜா(ரலி) அவர்கள் தம் செல்வம் அனைத்தையும் செலவு செய்தார்கள். அவர்களிடம் நோய் பரவியது. பெரும்பாலோர் அழிந்துவிடும் நிலைக்கு ஆளானார்கள். எனினும் அவர்கள் நிலை குலையாமல் உறுதியோடும் பொறுமையோடும் இருந்தார்கள். அவர்களில் எவரும் தன் மார்க்கத்திலிருந்து பின்வாங்கவில்லை.
Q40) பிரச்சாரத்திற்காக தாயிப் நகர் சென்ற நபி (ஸல்) அவர்களை அந்த நகரின் மக்கள் எவ்வாறு நடத்தினார்கள்?
இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதது மட்டுமல்லாம்ல் நபி (ஸல்) அவர்களை மிக மோசமாக நடத்தினார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக சிறுவர்களைத் தூண்டிவிட்டனர். அவர்கள் நபிகள் நாயகம்(ஸல்)அவர்களைக் கல்லால் எறிந்து அவர்களின் இரு கணுக்கால்களில் இரத்தம் வரும் அளவுக்கு காயப்படுத்தினார்கள்.
Q41) மக்கத்து இறை நிராகரிப்பாளர்கள் இஸ்லாத்தை ஏற்க வேண்டுமென்பதற்காக நபி (ஸல்) அவர்கள் செய்து காட்டிய அற்புதம் என்ன?
ஒரு முறை மக்கத்து இறை நிராகரிப்பாளர்கள் சந்திரனை இரு கூறாகப் பிளந்து காட்டும்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வேண்டினார்கள். அதை அவர்கள் தமது இறைவனிடம் வேண்டி சந்திரனை இரு கூறாகப் பிளந்து காட்டினார்கள். குரைஷிகள் அவ்வற்புதத்தை நீண்ட நேரம் கண்டார்கள். எனினும் அவர்கள் அதை நம்பவில்லை. முஹம்மத் எங்களுக்கு சூனியம் செய்துவிட்டாரெனக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் இவர் உங்களுக்கு சூனியம் செய்து விட்டாலும் அனைத்து மக்களுக்கும் அவரால் சூனியம் செய்ய முடியாது. எனவே இதன் உண்மை நிலையை அறிந்துகொள்வதற்காக பயணக் கூட்டத் தினரை எதிர்பாருங்கள் எனக் கூறினார். பின்னர் பயணிகள் வந்தபோது அவர்களிடம் இது பற்றிக் கேட்டனர். அதற்கவர்கள் ஆம்! நாங்களும் அதைக் கண்டோம் எனக் கூறினர். எனினும் குரைஷிகள் இதன் பின்னரும்; நிராகரிப்பிலேயே பிடிவாதமாக இருந்தனர்.
Q42) நபி (ஸல்) அவர்களின் மிஹ்ராஜ் பயணம் பற்றிக் கூறுக.
நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரஜப் மாதம் 27-ஆம் இரவு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு ஃபலஸ்தீனிலுள்ள பைத்துல் முகத்தஸுக்கு கொண்டு சென்றார்கள். பிறகு அங்கிருந்து அவர்களை வானத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அவர்கள் தமது இறைவனின் மாபெரும் அத்தாட்சிகளைக் கண்டார்கள். வானில் வைத்தே ஐவேளைத் தொழுகைகள் கடமையாக்க ப்பட்டன. அதே இரவில் அவர்கள் தெளிந்த உள்ளத்துடனும் அழுத்தமான உறுதியுடனும் மக்காவிற்குத் திரும்பி வந்தார்கள்.
Q43) உமர் (ரலி) அவர்கள் மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்த நிகழ்ச்சியைக் கூறுக:
முஸ்லிம்கள் அனைவரும் பயந்தவர்களாக இரகசியமாக மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த சமயத்தில் உமர்(ரலி) அவர்களின் ஹிஜ்ரத் வீரத்திற்கும் சவாலுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கியது. ஏனெனில் அவர்கள் தமது வாளை உருவிக்கொண்டு தமது வில்லை யும் ஏந்திக் கொண்டு கஃபதுல்லாவிற்குச் சென்று அதை வலம்வந்துவிட்டு பின்னர் இணை வைப்பவர்களை நோக்கி, ”எவன் தனது மiனைவியை விதவையாக்க விரும்புகிறானோ அல்லது தனது குழந்தையை அநாதையாக்க விரும்புகிறானோ அவன் என்னிடம் வரட்டும்! இதோ நான் ஹிஜ்ரத் புறப்படுகிறேன்!” எனக் கூறிவிட்டுச் சென்றார்கள். எவரும் அவரைத் தடுக்கத் துணியவில்லை.
Q44) நபி (ஸல்) அவர்கள் மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்த நிகழ்ச்சியைக் கூறுக:
நபி (ஸல்) அவர்களின் பிரச்சாரத்தை நிறுத்தமுடியாத மக்கத்து இறைநிராகரிப்பாளர்கள் ஆலோசனை நடத்தி நபி (ஸல்) அவர்களைக் கொன்றுவிடத் தீர்மானித்தார்கள். இச்சதித்திட்டத்தை அல்லாஹ் சங்கைக்குரிய தனது நபிக்கு தெரிவித்துவிட்டான். நபி (ஸல்)அவர்கள் அபூபக்கர்(ரலி)அவர்களுடன் ஹிஜ்ரத்துச் செய்ய முடிவு செய்தார்கள். அந்த இரவில் நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் அலீ(ரலி)யிடம் தம்முடைய இடத்தில் உறங்க வைத்தார்கள். சதிகாரர்கள் வந்து வீட்டை முற்றுகையிட்டார்கள். படுக்கையிலிருந்த அலீ (ரலி) யைப் பார்த்துவிட்டு அவர் முஹம்மதுதான் என எண்ணிக்கொண்டார்கள். அவர் எப்போது வெளியே வருவார் என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் . நபி (ஸல்) அவர்கள் மண்ணை அள்ளி அவர்களின் தலையில் தூவிவிட்டு வீட்டைவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்கள். அல்லாஹ் அவர்களின் பார்வையைப் பறித்துவிட்டான். ஆகவே அவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்றதை உணரவில்லை.
Q45) நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செல்லும் வழியில் எந்த குகையில் தங்கினார்கள்?
நபி (ஸல்) அவர்ககளும் அபூபக்கர்(ரலி) அவர்களும் சுமார் ஐந்து மைல் தூரம் சென்று ஸவ்ர் எனும் குகையில் ஒழிந்து கொண்டனர். குரைஷிகள் எல்லா பாகங்களிலும் நபி (ஸல்) அவர்களைத் தேடுவதற்கு ஆள் அனுப்பினார்கள். நபி (ஸல்) அவர்களை உயிருடனோ பிணமாகவோ கொண்டு வருபவருக்கு நூறு ஒட்டகங்கள் பரிசாகத் தரப்படுமென அறிவித்தார்கள். அவர்கள் நபி (ஸல்)அவர்களைத் தேடி குகை வாசலுக்கே வந்துவிட்டார்கள். எந்த அளவுக்கு என் றால் அவர்களில் ஒருவன் கீழே குனிந்து பார்த்துவிட்டால் அவர்கள் இருவரையும் கண்டு கொள்வான். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என அபூபக்கர் (ரலி)கடுமையான கவலை கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அபூ பக்கரே! நாம் இரண்டு பேர்தான் இருக்கிறோம் என எண்ணிக்கொண்டீரா? அல்லாஹ் மூன்றாவது ஆளாக இருக்கிறான்! நீங்கள் கவலைப்படாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்! எனக் கூறினார்கள். ஆனால் அக்கூட்டத்தினர் அவ்விருவரையும் பார்க்க வில்லை. இருவரும் குகையில் மூன்று நாட்கள் தங்கியிருந்துவிட்டு பிறகு மதீனாவை நோக்கி நடந்தனர்.
Q46) நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செல்லும் வழியல் நடைபெற்ற அற்புதம் என்ன?
நபி (ஸல்) அவர்ககளும் அபூபக்கர்(ரலி) அவர்களும் ஹிஜ்ரத் செல்லும் வழியில் உம்மு மஃபத் எனச் சொல்லப்படும் ஒரு பெண்மணியைக் கண்டனர். அவரிடம் உணவும் தண்ணீரும் கேட்டனர். அவரிடம் மெலிந்த ஒரே ஒரு ஆட்டைத் தவிர எதுவுமே இல்லை. அதில் துளிப் பால் கூட இல்லை. நபி (ஸல்) அவர்கள் அதன் அருகில் சென்று அதன் பால் மடியைத் தடவி பால் கறந்து ஒரு பெரிய பாத்திரத்தை நிரப்பினார்கள். அதைப் பார்த்து விட்டு உம்மு மஃபத் திகைத்துப்போய் நின்று கொண்டிருந்தார். பிறகு அனைவரும் தாகம் தீர அருந்தினர். பிறகு இரண்டாம் முறையும் பால் கறந்து பாத்திரத்தை நிறைத்து விட்டு அதை உம்மு மஃபதிடம் கொடுத்துவிட்டு நடையைத் தொடர்ந்தனர்.
Q47) நபி (ஸல்) அவர்களால் கட்டப்பட்ட இஸ்லாத்தின் முதல் பள்ளிவாசல் எது?
ஹிஜ்ரத் சென்ற நபி (ஸல்) அவர்கள் மதினாவின் குபா என்ற பகுதியை அடைந்து அங்கு நான்கு நாட்கள் தங்கியிருந்து அங்கு ‘குபா பள்ளிவாசலை’ கட்டியெழுப்பினார்கள்.
Q48) ஹிஜ்ரத் சென்று மதினா வந்தடைந்தவுடன் நபி (ஸல்) அவர்கள் யார் வீட்டில் தங்கினார்கள்?
நபி (ஸல்) அவர்கள் அபூ அய்யூப் அல்-அன்சாரி வீட்டில் தங்கினார்கள்.
Q49) முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகள் என்பவர்கள் யார்?
மக்காவிலிருந்து தம் சொத்து, உறவினர்கள் மற்றும் அனைத்தையும் துறந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்தவர்கள் முஹாஜிர்கள் ஆவார்கள். முஹாஜிர்களுக்கு உதவி செய்த மதீனாவாசிகள் அன்ஸாரிகள் ஆவார்கள்.
Q50) பத்ருப் போர் எப்போது நடைபெற்றது?
ஹஜ்ரி 2 ஆம் ஆண்டு ரமலான் 17 அன்று வெள்ளிக் கிழமை.