Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்க தேவையானவை

ஆதவன் நமக்கு கிடைத்த பெரும் வரப்பிரசாதம். ஆதவன் இன்றி நாம் இல்லை. அத்தகைய ஆதவனின் சக்திகள் அனைத்தும் நமக்கே நமக்காக.. புவியில் வாழும் ஒவ்வொரு ஜீவராசிகளுக்குமாக, என இறைவனால் படைக்கப்பட்டது தான் ஆதவன்.

இன்று நிலக்கரி தட்டுப்பாடு எனச் சொல்பவர்கள் நாளை யூரேனியம் தட்டுப்பாடு எனச் சொல்லமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
ஆனால், சூரியன் என்றும் .. மனிதன் வாழும் மட்டும் ஒளி கொடுத்துக் கொண்டே இருக்கும். அத்தகைய சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிப்பதனை ஊக்கப்படுத்த அரசு முன்வர வேண்டும்.

 சூரிய ஒளி குறைவான மழைக்காலம் என்பது வெகு சில நாட்களே! அதனையும் கணக்கிட்டு சேமிப்பை உருவாக்கிட முடியும் என்பதை உணர மறுப்பது ஏனோ? ஆண்டின் 300 நாட்கள் சூரிய ஒளியால் மின்சாரம் பெற்றால் மீத நாட்களை நீர் நிலைகள் மூலம் பெற முடியும் அல்லவா! இவற்றின் ஊடே தேவைக்கான சில சதவீத மின்சாரத்தை காற்றாலைகள் மூலம் பெற முடியும் அல்லவா!! அப்படியிருக்கும் பொழுது, அபாய சங்கான அணுமின் உலைகள் எதற்கு?

மின்சாரம்

மின்சாரம் இரண்டு வகைப்படும். 1. AC (Alternating Current) - நம் வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரம் AC வகையைச் சார்ந்தது.
2. DC (Direct Current) - பேட்டரியில் இருந்து கிடைக்கும் நேர் மின்சாரம். சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் மின்சாரமும் பேட்டரியில் DC-ஆகவே சேமிக்கப்படுகிறது. இதனை AC ஆக கன்வெர்ட் செய்தே நாம் வீடுகளில் பயன்படுத்துகிறோம்.


சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்க தேவையானவை


சூரிய ஒளியை மின்சாரமாக மாற்ற முக்கிய தேவைகள் என்னவென பார்த்தீர்கள் என்றால்,
1. சோலார் பேனல்/செல் (Solar Panel)
2. சோலார் ரெகுலேட்டர் (Solar Regulator)
3. பேட்ரி Battery (Power Storage)
4. ஈன்வெர்ட்டர் ( Inverter or DC to AC Converter)
இந்த நான்கும் இருந்தால் போதும் நம் வீட்டிலேயே மின்சாரம் தயாரிக்கலாம்.

PV எனப்படும் Photo Voltaic எனும் சிறிய பேட்டரிகளால் ஆனது தான் சோலார் பேனல். சோலார் செல் பல வடிவங்களில், அதாவது நம் மின்சார தேவைக்கு தகுந்தவாறு சிறிது பெரிது என பல வடிவங்களில் கிடைக்கும். இதன் மீது படும் சூரிய ஒளியே மின்சாரமாக மாற்றப்படுகிறது. அதனை பேட்டரியில் சேகரித்து பின்னர் இன்வெர்ட்டர் மூலம் நம் தேவைக்கு பயன்படுத்துகிறோம். சோலார் பேனலுக்கும் பேட்டரிக்கும் இடையில் ரெகுலேட்டர் பயன்படுத்துவதன் காரணம், வெயில் பயங்கரமாக கொழுத்தும் பொழுது அதிக மின்சாரமும் ..மேக மூட்டத்தால் மப்பும் மந்தாரமுமாய் இருக்கும் பொழுது மிக மிக குறைந்த மின்சாரமும் என ஒர் அளவீடற்ற மின்சாரம் பேட்டரிக்கு செலுத்தப்படுவதால் .. அதிக மின்சாரம் வரும் பொழுது பேட்டரி பழுதடைய வாய்ப்பு இருக்கிறது. அதற்காகவே ரெகுலேட்டர் பயன்படுத்தப்படுகிறது.

பயன்பாட்டிற்கு தகுந்த அளவிலான சோலார் சிஸ்டம் தேர்ந்தெடுப்பது

வீட்டில் மாதம் எவ்வளவு யூனிட் கரன்ட் உபயோகப்படுத்தி கட்டணம் செலுத்தி வருகிறோம் என்பதனைக் கணக்கிட்டு, நம் தேவைக்கு தகுந்த அளவிலான மின் உற்பத்தியை செய்யும் சோலார் செல் மற்றும் சேமிக்கும் பேட்டரியை தேர்வு செய்து வாங்கிக் கொள்ளலாம். அல்லது வீட்டில் பயன்படுத்தும் பொருட்களான மின்விசிறி, டூயுப் லைட், கணிணி, மிக்சி போன்ற பொருட்களின் வாட்ஸ்யினை கணக்கீடு செய்தும் தேவையான பேட்டரியின் கேப்பாசிட்டி மற்றும் இன்வர்ட்டரின் Capacity ஐ தேர்வு செய்து வாங்கிக் கொள்ளலாம்.

சோலார் மின்சாரத்தின் விலை கணக்கீடு

சோலார் பேனல் சிஸ்டத்திற்கு 20 வருட வாரண்டியுடன் பல கம்பெனிகள் கொடுப்பதால், இதன் ஆயுட்காலம் 25 முதல் 30 வருடங்கள் வரை சிறப்பாக செயல்படும் என நம்பலாம். மேலும், பேட்டரி மற்றும் இன்வர்ட்டர் மட்டுமே வருடம் தோறும் நமக்கு சின்ன சின்ன செலவுகளைக் கொடுக்கும். அதுவும் நீங்கள் கார் பேட்டரி உபயோகப்படுத்துபவராக இருந்தால் அதனை சரியாக மெயிண்டனன்ஸ் பண்ணுவதன் மூலம் 7 வருடத்திற்கு ஒர் முறை மாற்றம் செய்தால் போதும். இல்லாவிடில் 4 வருடத்திலேயே புதிய பேட்டரி வாங்க நேரிடலாம்.

நாம் சோலார் சிஸ்டத்தை இருபது வருடம் உபயோகப்படுத்துவதாக கொள்வோம், மேலும் அதனைப் பயன்படுத்தி மாதம் 100 யூனிட் கரண்ட் பெற்றுக் கொள்வதாகக் கொண்டால், நாம் செய்த 1 இலட்ச ரூபாயின் முதலீட்டைக் கணக்கிட்டால், ஒர் யூனிட் மின்சாரத்தின் விலை ரூபாய்

மாதம் 100 யூனிட் > 12 மாதம் 1200 யூனிட் > 20 வருடம் 2400 யூனிட்

20 வருடத்தில் ரூ.1,00,000 மூலம் / 24,000 யூனிட் மின்சாரம் பெற்றோம் என்றால் 1 யூனிட் மின்சாரத்தின் விலை ரூ 4.20 மட்டுமே.

இதே 20 வருட கால இடைவெளியில் புதிய பேட்டரி வாங்க நேரிடுவதால் அதனோடு சேர்த்து சின்ன சின்ன செலவினங்களையும் கணக்கில் கொண்டு கூடுதலாக ரூபாய் 40,000 சேர்த்துக் கொண்டால், ரூ.1,40,000/ 24,000 யூனிட் = 1 யூனிட் விலை ரூ. 5. 85 மட்டுமே.

மேலும் கூடுதல் செலவினங்களை சேர்த்து ஒர் யூனிட் மின்சாரத்தின் விலை ரூபாய். 8 ஆக இருந்தால் கூட சிறப்பானதே. ஏனெனில் அரசு நமக்கு கொடுக்கும் மின்சாரத்தின் விலை இதைவிட அதிகம், ஆனால் மக்களிடம் பெரும் வரியினை இதற்கு மானியமாய் கொண்டு நமக்கு குறைந்த விலையில் தருகிறதே தவிர.. இதைவிட குறைந்த விலையில் தயாரித்து இலாபம் ஈட்டுவது இல்லை.

அரசு மின்சாரம் Vs சூரிய ஒளி மின்சாரம்

1. அரசு மின்சாரம் நமக்கு மிகக் குறைந்த டெபாசிட் தொகையுடன் வீட்டுக்கு வந்து சேருவதுடன் 220வோல்ட் அழுத்தத்துடனும் கிடைக்கிறது. ஆனால், சூரிய ஒளி மின்சாரத்திற்கு ஆரம்பத்திலேயே மொத்த விலையையும் செலுத்த வேண்டியிருப்பதால் அனைவரும் மாத கட்டணமாய் வாங்கும் அரசு மின்சாரத்தையே விரும்புகின்றனர்.

2.அரசு மின்சாரம் வாசிங்க் மெசின், ஏ.சி, மோட்டார் பம்ப் போன்றவற்றின் ஆரம்ப இயக்கத்துக்கு தேவையான அதிகப்படியான மின்சாரத்தை கொடுக்க வல்லது. ஆனால், சூரிய ஒளி மின்சாரத்தால் இவற்றையும் இயக்க வேண்டும் என்றால் என்னும் கூடுதல் தொகை செலவிட்டு அதிகப்படியான Capacity கொண்ட Battery & Inverter வாங்க வேண்டும் . மற்றபடி கணினி, டிவி, பேன், லைட் போன்றவற்றை இயக்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை.

3. அரசு மின்சாரம் 5 நாள் தொடர்ந்து மழை பெய்தாலும் கிடைக்கும். சூரிய ஒளி மின்சாரம் அப்பொழுது தடைபட்டு போகுமே!. சூரிய ஒளி மின்சாரம் பயன்படுத்துபவர்கள், அரசு மின்சார வழித்தடத்தை துண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது போன்ற சூழலில் பயன்படுத்திக் கொள்ளலாம்.



Followers

Comments Please...