Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

பெற்றோரின் சம்மதம் இன்றி பெண் திருமணம் செய்யலாமா?


எந்தப் பெண்ணாவது தனது பொறுப்பாளரின் அனுமதியின்றி திருமணம் செய்து கொண்டால் அவளது திருமணம் செல்லாது, அவளது திருமணம் செல்லாது, அவளது திருமணம் செல்லாது…’ என்று மூன்று முறை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: அபூதாவூது 2078, திர்மிதி 1108, அஹ்மத்)

‘வலி (பொறுப்பாளர்) மூலமாகத் தவிர எந்தத் திருமணமும் இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி), நூல்கள்: அபூதாவூது 2080, திர்மிதி 1107, அஹ்மத்)

நாம் மேலே குறிப்பிட்டிருக்கும் வசனத்திலிருந்து பெண்ணுக்கு பொறுப்பாளர் அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டிருப்பதை உணரலாம்.
‘…அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;…’ (அல்குர்ஆன் 2:221)

ஒரு பெண் யாருடைய பொறுப்பில் இருக்கிறாரோ அவரது சம்மதம் அவசியம் தேவை, பொறுப்பாளர்கள் அந்தப் பெண்ணின் பெற்றோராவும் இருக்கலாம் அல்லது பெற்றோர் இல்லாத பட்சத்தில் அவர்களை பொறுப்பெடுத்து வளர்த்து வரும் உறவினர்களாகவும் இருக்கலாம். அவர்களின் சம்மதம் இல்லையேல் அந்த திருமணம் செல்லாது என்பது மேற்கண்ட குர்ஆன் ஹதீஸின் விளக்கமாகும்.

இரண்டாது விஷயம் திருமணம் செய்யும் பெண்ணின் சம்மதத்தை பொறுப்பாளர் பெறுவதும் அவசியமாகும். அதற்கான ஆதாரம் வருமாறு.

‘விதவையின் அனுமதி பெறாமல் அவளுக்குத் திருமணம் செய்து வைக்கலாகாது. கன்னிப் பெண்ணையும் அவளது சம்மதம் பெறாமல் திருமணம் செய்து வைக்கலாகாது. மௌனமே அவளது சம்மதமாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புஹாரி 5136, முஸ்லிம் 2773, அபூதாவூது 2087, திர்மிதி 1113)

மற்றொரு ஹதீஸில் பெண்ணின் சம்மதம் இன்றி செய்து வைத்த திருமணத்தை நபி (ஸல்) அவர்கள் ரத்து செய்தார்கள். அந்த ஹதீஸ் வருமாறு.

கன்னி கழிந்த பெண்ணாயிருந்த என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை. ஆகவே நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். (என் தந்தை முடித்து வைத்த) அத்திருமணத்தை நபி (ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள். (அறிவிப்பாளர்: கன்ஸா பின்த் கிதாம் அல்அன்சாரியா (ரலி), நூல்: புஹாரி 5138, 6945)

மற்றொரு ஹதீஸில்,

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கன்னிப்பெண் வந்து, ‘என்னுடைய தந்தை எனது விருப்பமின்றியே என் திருமணத்தை நடத்தி விட்டார்’ என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பெண் அத்திருமணத்தை முறித்து விடலாம், அல்லது தொடரலாம் என்ற இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க உரிமையளித்து விட்டார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்கள்: அபூதாவூது 2091, இப்னுமாஜா 1875, அஹ்மத், முஅத்தா)

மூன்றாவது விஷயம் சாட்சிகள் இன்றி திருமணங்கள் செய்யக்கூடாது. அதற்கான ஆதாரம் வருமாறு.

‘சாட்சிகள் இன்றி தானாகத் திருமணம் செய்யும் பெண்கள் தான் விபச்சாரிகளாவர்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: திர்மிதி 1109)

பொறுப்பாளரின் சம்மதம், பெண்ணின் சம்மதம், சாட்சி இவை அனைத்தும் பெண்ணின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு வளையங்களாகும். பெண்கள் எந்த விதத்திலும் ஏமாற்றப்பட்டு விடக்கூடாது என்பதற்காக இஸ்லாம் இந்த விதி முறைகளை வகுத்துள்ளது. இதன் அருமை பெருமைகள் ஒரு பெண் பாதிக்கப்படும் போது தான் தெரிய வரும். அப்போது ஏற்படும் ஞானோதயத்தால் கிடைக்கும் பயன்கள் மிகவும் குறைவாக இருக்கும்.

Followers

Comments Please...