கண்ணைப் பல விதமான நோய்கள் தாக்குகின்றன. சாதாரணமாக கண்ணைத் தாக்கும் கண்நோய் (Conjunctivitis) இலிருந்து பார்வை பறிபோகுமளவிற்குப் பயங்கரமான Optic neutitis (பார்வை நரம்பு அழற்சி) வரை பல்வேறுபட்ட பிரச்சனைகள் கண்ணிலே ஏற்படலாம்.
கண்ணில் காணப்படும் நீர்மயவுடநீர் மீண்டும் அகத்துறிஞ்சப்படாத பட்சத்தில் கண்ணின் உள்ளே அழுத்தம் அதிகரிக்கின்றது. இவ்வாறு கண்ணில் அழுத்தம் அதிகமாவதைக் ”குளுக்கோமா” என்று மருத்துவப் பெயரால் அழைக்கின்றார்கள்.
பொதுவாக கண்ணினுள்ள நீர்மயவுடநீரின் அழுத்தம் (பிரஸர்) 21 mm Hg ற்குள் இருக்க வேண்டும். அதற்கு மேலே அதிகரிக்கும்போது அந்த அழுத்தமானது பார்வை நரம்பைப் (Optic Nerve) பாதிக்கிறது.
கண்ணினுள் அழுத்தம் அதிகரிப்பதே குளுக்கோமா நோய்க்கு முக்கிய காரணமாக இருந்த போதிலும் இதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்த நோயானது அமைதியாக ஆர்ப்பாட்டமின்றி, நோயாளி உணராமலேயே அவரது பார்வையைப் பறிக்கின்ற ஒரு ஆபத்தான கண் நோயாகும்.
குளுக்கோமா நோயினால் பார்வை நரம்புகள் பாதிப்படைவதால் பார்க்கும் திறன் பாதிக்கப்பட்டு படிப்படியாக அதிகரித்து முழுமையாகக் குருடாக்கும்.
குளுக்கோமா பாதிப்பு மோசமடையும் போது சிகிச்சையும் பலன் தருவதில்லை. ஆனால் குளுக்கோமா பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ளும் பட்சத்தில் பார்வையிழப்பைத் தடுத்து நிறுத்த முடியும்.
எனவே தான் கண்வைத்திய நிபுணர்கள் குளுக்கோமா பாதிப்புத் தொடர்பாக மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர். நாற்பது வயதை நெருங்கும் ஒருவர் தனது கண்களை அவ்வப்போது கண்வைத்தியரிடம் பரிசோதித் துக் கொள்வது முக்கியம். கண்ணிலுள்ள கோளாறுகளை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து கொண்டால் பார்வைக் குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க முடியுமென்து உண்மை.
குளுக்கோமா என்றால் என்ன?
நம் கண்களின் அமைப்பிலேயே ப்ளம்பிங் போல் குழாய் அமைப்புகள் உள்ளன. இந்த குழாய் அமைப்பானது கண்களின் கருவிழிப்பகுதிகள் மற்றும் லென்ஸ் ஆகியவற்றிற்கு வேண்டிய திரவத்தை எடுத்துச் செல்கிறது. இந்த ப்ளம்பிங் அமைப்பில் கோளாறுகள் ஏற்பட்டால், அதாவது திரவம் வரும் வழியிலோ அல்லது வெளியேறும் வழியிலோ தடை ஏற்பட்டால் கண்ணிற்குள் திரவத்தின் அழுத்தம் அதிகமாகும். ஆனால் இந்த திரவத்திற்கும் கண்ணீருக்கும் சம்பந்தம் இல்லை.
திரவத்தின் உற்பத்திக்கும், அது வெளியேறும் அளவிற்கும் இடையே ஏற்படும் சமமின்மையால் அழுத்தம் கூடுகிறது. இதனால் விழிகளுக்குப் பின் உள்ள விழி நரம்புகள் பாதிப்படைகிறது.
குளுக்கோமா யாருக்கு ஏற்படும்?
* 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
* குளுக்கோமா நோயாளிகளின் ரத்த உறவினர்களுக்கு
* அதிகிட்டப்பார்வை உள்ள நபர்களுக்கு (myopes)
* சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு
குளுக்கோமா ஏற்படக் காரணம் என்ன?
முதற்கட்ட குளுக்கோமா நோய் ஏற்பட அடையாளம் காணக்கூடிய காரணம் எதுவும் இல்லை. பெரும்பாலும் மரபுக் கூறுகளால் இது ஏற்படுகிறது. கண்ணின் அமைப்பே சிலருக்கு சில வகை குளுக்கோமா நோயை தோற்றுவிக்கலாம்.
குளுக்கோமா நோய்களில் பல வகைகள் உண்டு.
1. முதற்கட்ட திறந்த கோண குளுக்கோமா
கண் திரவம் பாயும் வடிகால் போன்ற அமைப்பின் கோணம் பழுதடையும்போது கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தம் அதிகரிக்கும்.
2. முதற்கட்ட கோண மூடுதல் குளுக்கோமா
திரவ வடிகால் கோணம் சில சமயங்களில் திடீரென தடைபடும். அதாவது வடிகாலின் வாய்ப்பகுதியில் ஒரு காகிதம் அடைப்பது போன்று ஏற்பட்டு திரவ வெளியேற்றத்தை தடுக்கும். இதனால் வேகமாக அழுத்தம் அதிகரித்து பார்வை மங்கல், கடும் வலி, குமட்டல், வாந்தி மற்றும் தலைவலி ஏற்படலாம். இந்த நிலை உடனடியாக கண் மருத்துவரை ஆலோசிக்க பரிந்துரை செய்கிறது. தவறினால் பார்வையிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
குறை விறைப்பு குளுக்கோமா (Low Tention GLAUCOMA)
குளுக்கோமா வகையிலேயே இது ஒரு புதிரான தன்மை கொண்டது. கண்களில் உள்ள திரவத்தின் அழுத்தம் சாதாரணமாக இருக்கும் போது கூட optic nerve பழுதடையும் நிலை இது. பார்வை நரம்பிற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் நாளங்கள் இறுக்கமடைவதால் இவ்வகை குளுக்கோமா ஏற்படுவதாக சமீப ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் கட்ட குளுக்கோமா
நீரிழிவு அல்லது எரிச்சல், வீக்கம், கண்புரை தீவிரமடைந்த நிலை, ஸ்டெராய்ட் உள்ளிட்ட மருந்துகள், கண்களில் ஏற்படும் காயங்கள் ஆகியவற்றால் திரவ வடிகால் கோணம் சேதமடையும்போது இந்த வகை குளுக்கோமா ஏற்படுகிறது. இதற்கு சிகிச்சை அளிக்கும் போது குளுக்கோமாவுடன் சேர்த்து அடிப்படை பிரச்சினைக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பிறவி அல்லது வளர்ச்சி நிலை குளுக்கோமா
குழந்தைகளையும், இளம் வயதினரையும் பாதிக்கும் மிகவும் அரிதான வகை குளுக்கோமா இதுவே. இது வம்சாவழியாகவோ அல்லது குழந்தை கருப்பையில் வளரும்போது அதன் கண் திரவ வடிகால் பாதைகள் வளரும்போது தவறாகவோ அல்லது பூர்த்தியடையாத வளர்ச்சியாகவோ அமைந்தால் ஏற்படும்.
குழந்தைகளிடம் பெற்றோர்கள் கீழ்வரும் அறிகுறிகளை கவனிப்பது நல்லது. விழி பெரிதாகுதல், விழிவெண்படலத்தில் மறைப்பு, கண்ணீர் அதிகமாக வருதல், வெளிச்சத்தை குழந்தை தவிர்த்தல் ஆகிய அறிகுறிகளை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். இத்தகைய நிலையில் குழந்தையை உடனே கண் மருத்துவரிடம் எடுத்துச் செல்ல வேண்டும், மறத்துப்போகும் மருந்து கொடுத்து மருத்துவர்கள் விரிவான பரிசோதனை மேற்கொள்வார்கள்.
நோயறிதல்
இந்நோய் அறிய 4 முக்கிய விஷயங்கள் கவனிக்கப்படும். கண் திரவ அழுத்தம், முன்பகுதியில் உள்ள அறையின் கோணம் optic nerve, வடிவம் மற்றும் நிறம் மற்றும் பார்வைப்புலம் ஆகியவைகள் கவனிக்கப்படும்.
குளுக்கோமா பெரும்பாலும் கட்டுப்பாட்டில் வைக்கப்படலாமே தவிர முழு குணம் சாத்தியமில்லை. பார்வையை அடிக்கடி பரிசோதனை செய்து கொண்டிருப்பதன் மூலம் இந்நோய் ஏற்படுவதை தடுக்கலாம்.