Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுப்பதை விட தடுப்பூசி போடுவதே சிறந்தது


போலியோ சொட்டு மருந்து போடப்படும் 1 கோடி குழந்தைகளில், தடுப்பு மருந்தின் மூலமாக ஒரு குழந்தை பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதனால், 100 சதவீதம் போலியோ பாதிப்பை தடுக்க போலியோ தடுப்பூசி போடுவதே சிறந்தது என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 16ம் தேதி ‘உலக போலியோ சொட்டு மருந்து தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் இளம்பிள்ளை வாதம் என்ற போலியோவை ஒழிக்க 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. இந்தியாவில் 2011 ஜனவரி 13ம் தேதியில் இருந்து, எந்த ஒரு குழந்தையும் போலியோவால் பாதிக்கப்படவில்லை. அதனால், உலக சுகாதார நிறுவனம் 2012 பிப்ரவரி 24ம் தேதி போலியோ பரவும் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியது.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக போலியோ பாதிப்பு இல்லை. ஆனால், வடமாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார், டெல்லி, சண்டிகரில் 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை போலியோவால் குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். இதேபோல் அரியானா, பஞ்சாய், இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் 2010ம் ஆண்டில் ஆங்காங்கே போலியோ பாதிப்புகள் இருந்தது.

அதனால், உலக போலியோ தினத்தில் உத்தரப்பிரதேசம், பீகார், டெல்லி, சண்டிகர் மாநிலம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது. மற்ற 9 வடமாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு வழங்கப்பட்டது. இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் இளங்கோ கூறியதாவது:

உத்தரப்பிரதேசம், பீகார், டெல்லி, சண்டிகர் உள்ளிட்ட 14 வடமாநிலங்களில் 2010ம் ஆண்டு இறுதிவரை போலியோ பாதிப்பு இருந்தது. அதனால், உலக போலியோ தினத்தில் அந்த மாநிலங்களில் 5 வயதுக்குட்பட்ட சுமார் 7 கோடி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது. தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட சுமார் 70 லட்சம் குழந்தைகள் உள்ளனர். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக, எந்த குழந்தையும் போலியோவால் பாதிக்கப்படவில்லை.

அதனால், உலக போலியோ சொட்டு மருந்து தினத்தில் தமிழகத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை. இந்தியாவில் குழந்தைகளுக்கு வாய் வழியாக போடப்படும் சொட்டு மருந்து மூலம், நாட்டில் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த முறையில் சொட்டு மருந்து போடப்படும் 1 கோடி குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு தடுப்பு மருந்தின் மூலம் போலியோ பாதிப்பு வரவாய்ப்புள்ளது என்பதை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

எனவே, குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடுவதே சிறந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற பல்வேறு நாடுகளில் தற்போது வாய் வழியாக போலியோ சொட்டு மருந்து போடுவதை நிறுத்தியுள்ளனர். போலியோ தடுப்பூசி மட்டுமே போடுகின்றனர். போலியோ தடுப்பூசி போடுவதால், 100 சதவீதம் போலியோ பாதிப்பை தடுத்துவிடலாம்.

Followers

Comments Please...