வாயுத் தொல்லையால் வலி என்பது பரவலாகப் பலரும் சொல்கிற விஷயம். எதைச் சாப்பிட்டாலும் வாயு என்பதும், அதன் விளைவால் வலி வருகிறது என்பதும் உண்மையல்ல. வாயுவினால் வலி வருமோ, வராதோ... ஆனால், ஒரு வாயுவினால் வலிகளை விரட்ட முடியும்! யெஸ்..! ஓஸோன் சிகிச்சையின் மூலம் வலியில்லாத வாழ்க்கைக்குத் திரும்பலாம் என்கிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார்.
ஓஸோன் சிகிச்சையின் சிறப்புகளைப் பற்றியும், எந்த மாதிரியான வலிகளை அது விரட்டும் என்றும் விளக்கமாகப் பேசுகிறார் அவர். ‘‘குடிக்கிற தண்ணீரில் கூட ஓஸோனின் உபயோகம் வந்து விட்டது. 18ம் நூற்றாண்டிலேயே பிரபலமாக இருந்த சிகிச்சைதான் இது. ஆனால், கடந்த 40 ஆண்டுகளாகத்தான் வலி நிவாரணத்துக்கு அது உதவுவதாக விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு, உபயோகத்திலும் இருக்கிறது.
ஓஸோன் என்பது ஒரு வகை வாயு. நாள்பட்ட சதை வலி, பெண்களுக்கு வரும் ‘ஃபைப்ரோமையால்ஜியா’ என்கிற வலி, இடுப்பு வலி, முதுகு வலி, தோள்பட்டை வலி எனப் பல்வேறு வலிகளைப் போக்குவதில் இந்த சிகிச்சை உதவுகிறது. ஓஸோன் உண்டாக்கும் ஒரு கருவியின் மூலம், மருத்துவ ஆக்சிஜனை ஓஸோனாக மாற்றி, குறிப்பிட்ட அளவு எடுத்து, பல்வேறு இடங்களுக்கும் ஊசி மூலம் செலுத்தினால் அந்த இடத்தில் வலி குணமாகும்.
மிக முக்கியமாக வயதானவர்களுக்கு உண்டாகும் முழங்கால் வலி, தோள்பட்டை வலிகளுக்கு இந்த ஓஸோனை ஊசி மூலம், ஜாயின்ட்டுகளில் செலுத்தும் போது, வலி நிவர்த்தியாகி, நிம்மதி பெறுவார்கள். முதுகுத்தண்டு அழற்சியினால் வரக்கூடிய முதுகுவலிக்கு குறிப்பிட்ட அளவு ஓஸோனை சிறிய ஊசி மூலம் பாதிக்கப்பட்ட முதுகெலும்புத்தண்டின் உள்ளே செலுத்தும் போது, அது சுருங்கி, வலி வருவது தவிர்க்கப்படுகிறது.
குழந்தைகள் தவிர்த்து, மற்ற எல்லோருக்கும் ஒத்துக்கொள்ளக்கூடிய சிகிச்சை இது. பக்க விளைவுகள் கிடையாது. 95 சதவிகித வலிகளை இந்த முறையில் நீக்க முடியும். வாயுத்தொல்லையினால் வலி என்பது மாறி, வாயுவினால் வலி நீக்கம் என்பது வரவேற்கத்தக்க விஷயம்தானே!’’