Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்

மாரடைப்பு: சில அவசிய தகவல்கள்
இன்று மாரடைப்பு, அரிய மனித உயிர்களைப் பறித்துவருவதை கண் முன்னால் காண்கிறோம். மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களை அறிந்து கொண்டால் நம்மைக் காத்துக்கொள்ள முடியும். மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் காரணிகளை நாம் இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று, மாற்ற முடியாத காரணிகள். 

அதாவது, இயற்கையாகவே அமைந்த காரணிகள். இவற்றை நாம் மாற்ற முடியாது. உதாரணமாக, ஆண்கள், வயதானவர்கள், இதயநோயால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களைக் கொண்டவர்கள் போன்றோருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு சற்று அதிகம்.


ஆனாலும் இந்த விஷயத்தில் நம்மால் எந்தவிதக் கட்டுப்பாட்டையும் மேற்கொள்ள முடியாது. ஆனால் அடுத்தவகையான காரணிகள் கட்டுப்படுத்தக்கூடியவை. மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும், ஆனால் நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய காரணிகள் அவை.

சர்க்கரை நோய்:

இந்த நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் ஆனாலும், இவர்கள் ஒழுங்காக மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலமும், உணவுக் கட்டுப்பாட்டின் மூலமும் இந்த நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.

புகைத்தல்:

மாரடைப்பு ஏற்படுவதற்கு காரணமான முக்கிய காரணிகளில் ஒன்று புகைப்பழக்கமாகும். ஆனாலும் புகைக்காத நபர்களுக்கும் கூட மாரடைப்பு அபாயம் ஏற்படலாம்.

அதிக கொலஸ்ட்ரால்:

சரியான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி மூலம் நமது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாடாக வைத்திருப்பதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைத்துக்கொள்ள முடியும்.

அதிக ரத்த அழுத்தம் :

இந்த பாதிப்பு இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். சரியான மருந்துகள், உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு மூலம் இதையும் நாம் கட்டுப்பாடாக வைத்திருந்து மாரடைப்பைத் தவிர்க்க முடியும்.

மனஅழுத்தம் :

அதிக மனஅழுத்தம் உள்ளவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். தியானம் போன்றவற்றில் ஈடுபட்டு மன அழுத்தத்தை குறைப்பதன் மூலம் மாரடைப்பில் இருந்து தப்பிக்கலாம்.

அதிக உடல் பருமன் :

எப்போதும் நமது உடல் எடையை கட்டுப்பாடாக வைத்திருப்பது அவசியமாகும். அது, மாரடைப்பில் இருந்து மட்டுமல்ல, வேறு பல உடல்நலப் பிரச்சினைகளில் இருந்தும் நம்மைக் காப்பாற்றும்.


மாரடைப்பு: சில அவசிய தகவல்கள்

Followers

Comments Please...