நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது. கனியின் தோலுறை வயிற்றுப் போக்கை நிறுத்தும்.
வயிற்றில் ஏற்பட்ட புண்ணிற்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது. நார்த்தங்காயை அல்லது பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வர ரத்தம் சுத்தமடையும். வாதம், குன்மம் (வயிற்றுப் புண்), வயிற்றுப் புழு இவை நீங்கும். பசியை அதிகரிக்கும்.
நார்த்தங்காயின் மேல் தோலை தேன் அல்லது சர்க்கரைப் பாகில் ஊற வைத்து நன்கு ஊறிய பின் சீதக் கழிச்சல் உடையவர்களுக்கு கொடுக்க நல்ல பலன் தரும். கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச் சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்திவந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும்
சிலர் கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும். இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும்.
எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு நீண்ட ஆயுளோடு வாழலாம். நார்த்தங்காய் இலைகைளை நரம்பு நீக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, அதனுடன் வெள்ளை உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, தேங்காய் துருவல் வறுத்து சேர்த்து மிளகாய், உப்பு, புளி, பெருங்காயம், கறிவேப்பிலையும் சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.
இப்படி சாப்பிட்டு வர பித்தம் குறையும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் நா சுவையின்மை, குமட்டல், வாந்தி நிற்கும். பசியின்மை குறைந்து நன்கு பசிக்கும்.