திராட்சைகளை பதப்படுத்தி உலர வைத்து தயாரிக்கப்படும் உலர் திராட்சைகள், கூடுதல் சத்துக்களை பெறுகின்றன. அதிக ஆற்றல் தரக்கூடியதாகவும், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும் மாறிவிடுகிறது. அதிலுள்ள சத்துக்களை பார்க்கலாம்..
சாதாரண திராட்சைகள் அதிக அளவில் நீர்ச்சத்து கொண்டது. அதனை 16 சதவீதம் மட்டும் திரவம் இருக்கும் வகையில் உலர்த்தப்பட்டு உலர் திராட்சைகள் தயாரிக்கப்படுகின்றன. 6 விதங்களில் இதனை பதப்படுத்தி உலர்த்துகிறார்கள். திராட்சை ரசம் (ஒயின்) சேர்த்து உலர்த்தப்படும் முறையும் உண்டு.
உலர் திராட்சைகள் அதிக ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் உலர் திராட்சையில் 249 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. 100 கிராம் உலர் திராட்சையானது 3 ஆயிரத்து 37 மைக்ரோ மூலக்கூறு டி.இ. அளவு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.
உடலுக்கு தீங்கு செய்யும் ஆக்சிஜன்-பிரீ-ரேடிக்கல்களை நீக்கும் தன்மையைக் கொண்டு இது கணக்கிடப்படுகிறது. ஆனால் புத்துணர்ச்சி மிக்க திராட்சைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அளவு 1,118 மைக்ரோ டி.இ. அளவு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
திராட்சைகள் உலர்த்தப்படும்போது 2 மடங்கு நோய் எதிர்ப்புசக்தி கொண்டதாகிறது. 'ரெஸ்வெரட்ரால்' எனப்படும் துணை ரசாயனப் பொருள் உலர் திராட்சையில் காணப்படுகிறது. இது சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாகும். ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவை கட்டுப்படுத்த வல்லது.
புற்று நோய், உடல் அழற்சி, இதய பாதிப்பு மற்றும் அல்சீமர் போன்ற நோய்களுக்கு எதிர்ப்பாற்றல் அளிக்கக் கூடியது. ரத்தத் தட்டுகளின் பாதிப்பை சீர்படுத்த வல்லது ரெஸ்வெரட்ரால். நார்ச்சத்து உலர் திராட்சையில் கணிசமாக உள்ளது. 100 கிராம் திராட்சையில் 3.7 கிராம் நார்ப் பொருட்கள் காணப்படுகிறது.
உடல் எடையைக் குறைக்கவும், ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் குறைக்கவும் இது உதவும். கால்சியம், பொட்டாசியம், இரும்பு, மாங்கனீசு, மக்னீசியம், தாமிரம், புளூரைடு மற்றும் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய தாதுஉப்புக்கள் கணிசமான அளவில் காணப்படுகிறது.
100 கிராம் உலர் திராட்சையில் 749 மில்லிகிராம் பொட்டாசியமும், 23 சதவீதம் டி.ஆர்.எல். அளவில் இரும்புச்சத்தும் உள்ளன. தாதுஉப்புகள் பல்வேறு உடற்செயல்களுக்கும் அத்தியாவசியமானவை. பி-குழும வைட்டமின்களான தயாமின், பைரி டாக்சின், ரிபோபிளேவின், பான்டோதெனிக் அமிலம் போன்றவையும் சிறந்த அளவில் காணப்படுகிறது.
இவை பல்வேறு உடற்செயல்களில் பங்கெடுக்கின்றன. வைட்டமின்-சி, போலிக் அமிலம், கரோட்டீன்கள் போன்ற சத்துப் பொருட்கள் திராட்சைகளில் இருக்கும் அளவைவிட குறைந்துவிடுகிறது. சிறிதளவே காணப்படுகிறது.