செவ்வான் சிவக்குமா?
பிறை நிலா தொலையுமா?
கதிரவன் கரையுமா?
எரிமலை குமுறுமா?
கடலலை சூழுமா?
எப்படி
இந்த பூமியின் முடிவு?
எல்லா மனிதர்களும்
விழிபிதுங்க சிந்தித்திருக்க,
பூமியை நோக்கி
ஒரு விண்கல் வருவதாய்
ஊடகங்களில் தலைப்புச்செய்தி.
இன்னும் இரண்டு மணிநேரத்தில்
அது பூமியை முத்தமிடுமென்று
விஞ்ஞானம் கணித்தது.
கிட்டத்தட்ட பூமியின் முடிவு
உறுதியானது.
வானம் கொஞ்சம் இருள இருள,
மனித முகங்கள் நிறம் மாறுகிறது.
திருப்பதி பேருந்தில்
முண்டியடித்து ஏறுகிற சில முகங்கள்,
காதலி இல்லம் தேடி ஓடுகிற
சில முகங்கள்,
டாஸ்மாக் கடைகளை மொய்க்கிற
சில முகங்கள்,
தொலை பேசியிலும்,அலைபேசியிலும்
முத்தமிடுகிற சில முகங்கள்,
மெழுகின் ஒளியோடு தேவாலயங்களில்
உருகும் சில முகங்கள்,
குக்கிராமத்து அம்மாவை நினத்தழும்
திரைகடல் கடந்தோடிய சில முகங்கள்,
சாலை விதிகளை மீறி,
திக்கெட்டும் பறக்கிற சில முகங்கள்,
உறவுகளை தேடி
ஊரெங்கும் மாரத்தான் ஓட்டமெடுக்கிற சில முகங்கள்,
இதய துடிப்புகளை விட
இறை நாமத்தை அதிகமாய் உச்சரிக்கும் சில முகங்கள்,
புது மனைவிக்கு பூச்சரம் பதிலாய்,
பூக்கூடையே வாங்கித்தருகிற சில முகங்கள்,
மெரினா கரையெங்கும்
நிர்வாண நடனமிடுகிற சில முகங்கள்,
பேருந்து கம்பிகளில் தொங்கிக்கொண்டே பயணிக்கிற சில முகங்கள்,
டாஸ்மாக்கில் குடிக்கும் கணவனை
வீட்டிற்கு வரச்சொல்லி அழுகிற சில முகங்கள்,
டீக்கடை பெஞ்சில் கூட்டம் போட்டு
விஞ்ஞானத்தையும்,அஞ்ஞானத்தையும் அலசும் சில முகங்கள்,
சட்டென்று
புது செய்தி,
பூமியை நோக்கிவரும் விண்கல்
ஒரு மணிநேரத்தில் பூமியை தாக்கபோகிறது என்று.
செய்தி வாசிப்பவர் முகத்தில்
செயற்கையாய் ஒட்டி வைத்த சிரிப்பு.
தொலைகாட்சி அலைவரிசை மாற்றினேன்,
போக்குவரத்து நெரிசலில் சிக்கி நடந்தே வீட்டிற்கு ஓடும் ஒபாமாவையும்,
திருப்பதியில் தர்ம தரிசன வரிசையில்
கடை கோடியில் நிற்கும் அம்பானியையும்,
தலைப்புச்செய்திகளாய்
காட்டிக்கொண்டிருந்தார்கள்.
விண்கல் முத்தமிட இன்னும் 2 நிமிடங்கள்,
பூமியெங்கும் மூன்று முகங்கள் நிறைந்திருந்தது,
ஒரு முகம் மவுனத்துடன் இறைசன்னதிகளில்,
ஒரு முகம் அழுகையுடன் சாலைகளில்,
ஒரு முகம் சிரிப்புடன் டாஸ்மாக்கில்.
தூரத்தில் ஒரு சிரிப்பொலி கேட்டு திரும்பி பார்த்தேன்,
ஏதும் அறியாமல்
அழகாய் தன் நாய் குட்டியோடு
விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை.