நார்ச்சத்து, பொட்டாசியம் நிரம்பியது.
வயிற்றுப்புண், வயிற்றுக்கோளாறு, உப்புசம் நீக்கும்.
சிறுநீரகக்கல் உள்ளவர்களுக்கும் நல்ல பலன் தரும்.
வெப்பம் குறைக்கும்... நீர்க்கடுப்பு நீக்கும்.
தொடர்ந்து உணவில் சேர்க்கையில் பருமன் குறையும்... ஊளைச்சதை மறையும்.
மாதவிடாயின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கைக் குறைக்கும்.
நீரிழிவுகாரர்களுக்கும் பயனுள்ளது...
வாழைத்தண்டினை சுற்றியிருக்கும் கடுமையான பாகத்தை எடுத்துவிட்டு, வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளவும். நூல் நூலாக வரும் நாரை எடுத்துவிட்டு வட்டமாக நறுக்கியதை பொடியாக வெட்டி சமையலுக்கு உபயோகிக்கும் வரை, சிறிது தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் வெண்மை மாறி கருக்காமல் இருக்கும். அதை நறுக்கி, நாரெடுத்து, சுத்தம் செய்தால் 8 சுவை உணவுகளைச் சட்டென செய்யலாம்.
வாழைத்தண்டு சாலட்
என்னென்ன தேவை?
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு.
எப்படிச் செய்வது?
பொடியாக வெட்டி வைத்த வாழைத்தண்டுடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, சிறிது உப்பு சேர்த்து சாலட்டாக பரிமாறலாம்.
வாழைத்தண்டு பொரியல்
என்னென்ன தேவை?
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கைப்பிடி, பாசிப்பருப்பு - 2 டீஸ்பூன், பெரிய வெங்காயம் - சிறியது 1, பச்சை மிளகாய் - 2, மிளகாய் வற்றல் - 1, எண்ணெய் - தேவையான அளவு, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேங்காய்த் துருவல், உப்பு - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
பொடியாக வெட்டி வைத்த வாழைத்தண்டை வேக வைக்கவும். பாசிப்பருப்பினை நனைய வைத்து, கடைசியில் உப்பு சேர்த்து வேகவைக்கவும். பாசிப்பருப்பு பூப்பூவாக இருக்க வேண்டும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, கறிவேப்பிலை போட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் வதங்கியதும், வேகவைத்த வாழைத்தண்டினையும் சேர்த்து, தேங்காய்த்துருவல், கொத்தமல்லி இலை தூவிப் பரிமாறவும்.
வாழைத்தண்டு சூப்
பொடியாக நறுக்கிய ஒரு கைப்பிடி அளவு வாழைத்தண்டினை வேக வைக்கவும். அத்துடன் இரண்டு சின்ன வெங்காயம் (வட்ட வட்டமாக வெட்டியது), ஒரு பச்சை மிளகாய் (வட்டமாக பொடியாக நறுக்கியது) சேர்த்து வெந்ததும், ஒரு டீஸ்பூன் மைதா சேர்க்கவும். இரண்டு கொத்தமல்லி இலை கிள்ளிப் போட்டு, சிறிது மிளகுத்தூள், உப்பு சேர்க்கவும்.
* பொரியல், உசிலிக்கு வேக வைக்கும்போது அந்த நீரையும் எடுத்து மேற்குறிப்பிட்டவை சேர்த்தும் சூப் செய்யலாம்.
வாழைத்தண்டு துவையல்
என்னென்ன தேவை?
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கைப்பிடி, பாசிப்பருப்பு அல்லது கடலைப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், வெள்ளைப்பூண்டு - 1, பச்சை மிளகாய் - 2, மிளகாய் வற்றல் - 1, கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லி - சிறிதளவு, தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி, புளி - சிறிது, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
பாசிப்பருப்பு, சீரகம், வெள்ளைப்பூண்டினை சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும். கறிவேப்பிலை சேர்க்கவும். பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் சேர்த்து வதங்கும்போது, நறுக்கிய வாழைத்தண்டினை சேர்க்கவும். நன்றாக வதங்கியதும் தேங்காய்த் துருவல், புளி, உப்பு சேர்த்து வதக்கி ஆற வைக்கவும். ஆறியதும் மிக்சியில் அரைத்துப் பரிமாறவும். காரம் தேவையான அளவு அதிகமாகவோ குறைவாகவோ உபயோகிக்கலாம்.
வாழைத்தண்டு உசிலி
என்னென்ன தேவை?
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு, கடலைப்பருப்பு, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் - தேவையான அளவு, தாளிக்க எண்ணெய் - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேங்காய்த் துருவல் - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டை வேக வைத்துக்கொள்ளவும். கடலைப் பருப்பை ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். ஊறிய கடலைப் பருப்பினை மிக்சியில் மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து அரைக்கவும். மிகவும் கரகரப்பாகவோ, மிகவும் நைஸாகவோ இல்லாமல் அளவாக அரைத்தெடுக்கவும். கடாயில் எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை இட்டு தாளித்ததும் அரைத்து வைத்திருக்கும் கடலைப் பருப்பினை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தேவையானால் இன்னும் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து நன்றாக வதங்கியதும், வேக வைத்து எடுத்த வாழைத்தண்டினைச் சேர்த்து தேங்காய்த் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.
வாழைத்தண்டு ரைஸ்
வாழைத்தண்டு உசிலியைக் கொஞ்சம் அதிகமாகச் செய்து எடுத்துக்கொண்டு, அதே வாணலியில் சாதத்தைச் சேர்த்து லேசாக புரட்டி எடுக்க வாழைத்தண்டு ரைஸ் ரெடி. உசிலியில் தேங்காய்த்துருவல் சேர்ப்பதற்கு முன், சிறிது குடைமிளகாய் சேர்த்து சாதத்தில் கலந்தால் வாழைத்தண்டு புலாவ் தயார்.
* நெய்யில் வறுத்தெடுத்த முந்திரியை நெய்யோடு சேர்த்து சாதத்தில் சேர்த்தால் மணமாக இருக்கும்.
வாழைத்தண்டு ஸ்பெஷல் மோர்
வாழைத்தண்டை சிறிதளவு மோரில் போட்டு மிக்சியில் அடித்து வடிகட்டவும். ஜில் செய்த மீதி மோரில் வாழைத்தண்டுச் சாற்றை கலந்து, இஞ்சிச்சாறு, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து பருகவும்.