Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

ஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி

பெண் புத்தி பின் புத்தி' என்று நம்மூரில் சொல்வார்கள்... அதற்கு அர்த்தம், பின்னாளில் வரக் கூடியதையும் சிறப்பாக கணிக்கக் கூடியவர்கள் என்றுதான் எடுத்து கொள்ள வேண்டும். ஆம். ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை சிறிதாக இருந்தாலும், அதற்கு திறன் அதிகமாக உள்ளது என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஸ்பெயினின் மேட்ரிட் பல்கலைக்கழகங்களை சேர்ந்த நரம்பியல் ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு புலனறியும் தேர்வுகளை வைத்து சோதனை மேற்கொண்டனர்.

இதில் 18 முதல் 27 வயது கொண்ட 59 பெண்கள் மற்றும் 45 ஆண்கள் பங்கேற்றனர். ஆய்வு முடிவு விவரம்: ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை 8 சதவீதம் சிறியதாக உள்ளது. ஆனால், ஆண்களின் மூளையைவிட பெண்களின் மூளைக்கு திறன் அதிகமாக உள்ளது. இதனால்தான் ஆண்களை விட பெண்கள் திறமையானவர்களாக விளங்குகின்றனர்.

தூண்டுதல் பகுத்தறிவு, எண் திறன், நிலைமையை வேகமாக மாற்றி விடக்கூடிய திறன் ஆகியவற்றில் ஆண்களை விட பெண்கள் சிறப்பாக விளங்கினர். சிக்கலான விஷயங்களிலும் பெண்களின் மூளை, மிக குறைந்த செல்களின் சக்தியை மட்டுமே பயன்படுத்தி தீர்வு காணும் திறன் படைத்துள்ளது. எனினும், புலம்சார்ந்த நுண்ணறிவில் ஆண்கள் சிறப்பாக விளங்கினர். இவ்வாறு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் அறிவியல் துறை பேராசிரியர் டிரிவோர் ராபின்ஸ் கூறுகையில், ''மூளையின் அளவு என்பது ஒரு பிரச்னை இல்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. '' என்றார்.

Followers

Comments Please...