Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

பிராய்லர் கோழியில் அதிக அளவு ஆன்ட்டிபயாடிக்: சி.எஸ்.இ. எச்சரிக்கை!

புதுடெல்லி: பிராய்லர் கோழி இறைச்சியில் அளவுக்கு அதிகமான ஆன்டிபயாடிக் எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகள் கலந்திருப்பதாக மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் ( சிஎஸ்இ) எச்சரித்துள்ளது.     கோழி வளர்ப்பு உரிமையாளர்கள், கறிக்கோழி குறுகிய காலங்களில் வேகமாக வளர்வதற்காக,  பாக்டீரியாக்களை தடுப்பதற்காக செலுத்தப்படும் ஆன்ட்டிபயாடிக் மருந்துகளை அதிகம் பயன்படுத்துவதாகவும், இந்த மருந்துகள் காரணமே இல்லாமல் கோழியின் எடையை அதிகரிக்கவும்,
வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும், இதனால் இந்த மருந்துகள் அந்த கோழியின் இறைச்சியை சாப்பிடும் மனிதர்களின் உடலுக்குள்ளும் புகுந்துவிடுவதாகவும், இதனால் நோயாளிகளுக்கு ஆன்டிபயாடிக் மருந்தை கொடுக்கும்போது அதனை வேலை செய்யவிடாமல் தடுக்கும் பாக்டீரியாக்களின் ஆதிக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, இது தொடர்பாக மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் ( Centre for Science and Environment -CSE ) ஆய்வு மேற்கொண்டது.


இந்த ஆய்வின்போது எடுத்துக்கொள்ளப்பட்ட  70 கோழிக்கறி மாதிரிகளில்,  40 சதவீத மாதிரிகளில் அளவுக்கு அதிகமான ஆன்ட்டிபயாடிக் மருந்து இருப்பது தெரியவந்ததாக  சிஎஸ்இ தெரிவித்துள்ளது.

டெல்லியிலிருந்து 66 மாதிரிகளும், நொய்டாவிலிருந்து 12, குர்கானிலிருந்து 8 மற்றும் ஃபரிதாபாத் மற்றும் காஸியாபாத் ஆகிய இடங்களில் இருந்து தலா 8 மாதிரிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு சிஎஸ்இ ஆய்வுக்கூடத்தில் பரிசோதிக்கப்பட்டது. இந்த பரிசோதனைக்கு கோழிகளின் கிட்னி, தசை உள்ளிட்ட பாகங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டது.


பொதுவாக கோழிவளர்ப்பில் 6 ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டெட்ராசைக்ளின்,  என்ரோபிளாக்சசின், சிப்ரோபிளாக்சசின், நியோமைசின் உள்ளிட்டவை ஆகியவை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 5 வகை மருந்துகள் அனைத்து கோழிக்கறி மாதிரிகளிலும் காணப்பட்டன. கிலோவுக்கு 3.37-131.75 மைக்ரோகிராம் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளின் படிவுகள் அந்த கறியில் இருப்பது தெரியவந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குர்கான் பகுதியில் இருந்து வாங்கப்பட்ட கோழி இறைச்சி மாதிரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட, அதாவது ஆக்சிடெட்ராசைக்ளின், டாக்சிசைக்ளின், என்ரோபிளாக்சசின் மருந்துகளின் படிவுகள் அதிக அளவில் காணப்பட்டுள்ளது. இதனால், கோழிக்கறி சாப்பிடுபவர்களுக்கு, ஆன்ட்டி பயாடிக் மருந்துகளையும் தடுக்கும் பாக்டீரியாக்களின் ஆதிக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.


கறிக்கோழிக்கு அதிகம் ஆன்ட்டிபயாடிக் செலுத்தப்படுவதன் காரணமாக அதனை சாப்பிடும் மனிதர்களுக்கும் ஆன்ட்டி பயாடிக்கினால் குணப்படுத்த முடியக்கூடிய நோய்களையும் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. ஆன்ட்டி பயாடிக் பயன்பாடுகள் மனித, மருத்துவப் பயன்பாடுகளையும் மீறிச் சென்றுள்ளது.

சிப்ரோபிளாக்சசின் என்ற ஆன்ட்டிபயாடிக் மூக்கு முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களையும் எதிர்க்கும் மருந்தாகும். இதன்பலனை மனித உடல் இழக்கும்போது கிருமித் தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக மாறிவிடும். இந்தியாவில் இது அதிகரித்திருப்பதாக எச்சரித்துள்ள சி.எஸ்.இ. ஆய்வாளர்கள், இறைச்சி உற்பத்தித் தொழிற்துறையில் அதிகமாக ஆன்ட்டி பயாடிக் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அரசு கடும் சட்டங்களையும் கண்காணிப்பு முறையையும் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

Followers

Comments Please...